சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
936   விஜயமங்கலம் திருப்புகழ் ( - வாரியார் # 946 )  

கலக சம்ப்ரம

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தந்தனத் தானான தானன
     தனன தந்தனத் தானான தானன
          தனன தந்தனத் தானான தானன ...... தனதான

கலக சம்ப்ரமத் தாலேவி லோசன
     மலர்சி வந்திடப் பூணார மானவை
          கழல வண்டெனச் சாரீரம் வாய்விட ...... அபிராமக்
கனத னங்களிற் கோமாள மாகியெ
     பலந கம்படச் சீரோடு பேதக
          கரண முஞ்செய்துட் பாலூறு தேனித ...... ழமுதூறல்
செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர
     நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்
          செருகு முந்தியிற் போய்வீழு மாலுட ...... னநுராகந்
தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி
     லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்
          திடினு நின்கழற் சீர்பாத நானினி ...... மறவேனே
உலக கண்டமிட் டாகாச மேல்விரி
     சலதி கண்டிடச் சேராய மாமவ
          ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் ...... மகவாயும்
உணர்சி றந்தசக் ராதார நாரணன்
     மருக மந்திரக் காபாலி யாகிய
          உரக கங்கணப் பூதேசர் பாலக ...... வயலூரா
விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென
     இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்
          விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய ...... இளையோனே
விறல்சு ரும்புநற் க்ரீதேசி பாடிய
     விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
          விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் ...... பெருமாளே.
Easy Version:
கலக சம்ப்ரமத்தாலே விலோசன மலர் சிவந்திடப் பூண் ஆரம்
ஆனவை கழல வண்டு எனச் சாரீரம் வாய்விட
அபிராமக் கன தனங்களில் கோமாளம் ஆகியெ பல நகம்
படச் சீரோடு பேதக கரணமும் செய்து
உள் பால் ஊறு தேன் இதழ் அமுது ஊறல் செலுவி மென்
பணைத் தோளோடு தோள் பொர நிலை குலைந்து
இளைத்து ஏர் ஆகும் ஆருயிர்
செருகும் உந்தியில் போய் வீழும் மால் உடன் அநுராகம்
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில் உருகி
மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு(ம்) நின் கழல் சீர்
பாத(ம்) நான் இனி மறவேனே
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிடச் சேர்
ஆயம் ஆம் அவருடன் மடிந்திடக் கோபாலர் சேரியில்
மகவாயும் உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக
மந்திரக் காபாலியாகிய உரக கங்கணப் பூதேசர் பாலக
வயலூரா
கொலை தரும் வி(ல்)லைப் போர் வேடர் கோ என இனையும்
அம் குறப் பாவாய் வியாகுலம் விடு விடு என்று கைக் கூர்
வேலை ஏவிய இளையோனே
விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கயப் பூ
ஓடை மேவிய விஜயமங்கலத் தேவாதி தேவர்கள்
பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கலக சம்ப்ரமத்தாலே விலோசன மலர் சிவந்திடப் பூண் ஆரம்
ஆனவை கழல வண்டு எனச் சாரீரம் வாய்விட
... (சேர்க்கையில்
உண்டாகும்) ஊடல் கலகப் பரபரப்பால் கண்களாகிய மலர் சிவக்கவும்,
அணிந்த முத்து மாலைகளும் கழன்று விழவும், (புட்குரல்) வண்டு
முதலியவற்றின் ஒலிகளை வெளிப்படுத்தவும்,
அபிராமக் கன தனங்களில் கோமாளம் ஆகியெ பல நகம்
படச் சீரோடு பேதக கரணமும் செய்து
... அழகிய பருத்த
மார்பகங்களைக் கண்டு பெருங் களிப்புடன் குதித்து மகிழ்பவனாய்,
(உடலெல்லாம்) பல நகக் குறிகள் உண்டாக, சிறந்த வெவ்வேறு
வகையான புணர்ச்சிகளைச் செய்து,
உள் பால் ஊறு தேன் இதழ் அமுது ஊறல் செலுவி மென்
பணைத் தோளோடு தோள் பொர நிலை குலைந்து
இளைத்து ஏர் ஆகும் ஆருயிர்
... மனத்தில் பால் போலவும் தேன்
போலவும் இனிக்கின்ற வாயிதழ் அமுதம் போன்ற ஊறலைச் செலுத்தி,
மெல்லிய மூங்கிலைப் போன்ற தோளோடு தோள் இணைய நிலைமை
தளர்ந்து, அழகிய அரிய உயிர் சோர்வுற்று,
செருகும் உந்தியில் போய் வீழும் மால் உடன் அநுராகம்
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில் உருகி
மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு(ம்) நின் கழல் சீர்
பாத(ம்) நான் இனி மறவேனே
... பொருந்திய வயிற்றின் மீது போய்
விழுகின்ற மயக்கும் காமப்பற்றை வெளிக்காட்டும் களிப்புக் கூத்தாடி,
தணிவு பெறாத கூட்டுறவில் உள்ளம் உருகி, விலைமாதர்களுக்கு
அடிமைப் பட்டு, அவர்கள் இட்ட வேலைகளைச் செய்த போதிலும்,
உன்னுடைய வீரக் கழல் அணிந்த சிறப்புற்ற திருவடிகளை நான் இனி
மறக்க மாட்டேன்.
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிடச் சேர்
ஆயம் ஆம் அவருடன் மடிந்திடக் கோபாலர் சேரியில்
மகவாயும் உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக
...
உலக்கையை துண்டு துண்டாகப் பொடி செய்து ராவித் தூளாக்கி,
ஆகாயம் மேலே விரிந்துள்ள நடுக் கடலில் (அப்பொடிகளைச்) சேரும்படி
செய்தும், கூட்டமான ஆயர் அனைவரும் (சாபத்தின் காரணமாக) ஒரு
சேர இறந்து பட, இடையர்கள் வாழும் சேரியில் குழந்தையாக வளர்ந்தும்,
ஞானம் சிறந்த சக்ராயுதத்தை ஏந்தியும் இருந்த நாராயணனின் மருகனே,
மந்திரக் காபாலியாகிய உரக கங்கணப் பூதேசர் பாலக
வயலூரா
... (ஐந்தெழுத்து) மந்திரத்தின் மூலப் பொருள் ஆனவரும்,
பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், பாம்பைக் கையில் வளையாகக்
கொண்டவரும், பூதகணங்களைக் கொண்ட தலைவருமாகிய ஈசர்
சிவபெருமானின் பிள்ளையே, வயலூரில் வாழ்பவனே,
கொலை தரும் வி(ல்)லைப் போர் வேடர் கோ என இனையும்
அம் குறப் பாவாய் வியாகுலம் விடு விடு என்று கைக் கூர்
வேலை ஏவிய இளையோனே
... கொலை செய்யும் வில்லைக்
கொண்டு போர் புரியும் வேடர்கள் கோ கோ என்று பேரொலி இட்டு
நெருங்க, (அதைக் கண்டு) வருந்திய வள்ளி நாயகியை நோக்கி,
வருந்துகின்ற அழகிய குறப் பாவையே, நீ வருத்தத்தை விடு விடு
என்று கூறி, தான் கையில் ஏந்திய கூர்மையான வேலை (வேடர்கள்
மீது) செலுத்திய இளையோனே,
விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கயப் பூ
ஓடை மேவிய விஜயமங்கலத் தேவாதி தேவர்கள்
பெருமாளே.
... வீரம் வாய்ந்த வண்டுகள் நல்ல முயற்சியுடன் தேசி
என்னும் ராகத்தைப் பாடிடும், நறு மணம் கொண்ட தாமரைப் பூக்களைக்
கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில் வீற்றிருக்கும்,
தேவாதி தேவர்களின் பெருமாளே.

Similar songs:

936 - கலக சம்ப்ரம (விஜயமங்கலம்)

தனன தந்தனத் தானான தானன
     தனன தந்தனத் தானான தானன
          தனன தந்தனத் தானான தானன ...... தனதான

Songs from this thalam விஜயமங்கலம்

936 - கலக சம்ப்ரம

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song